கள்ளக்குறிச்சி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த க.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகள் தீபா (11). இவா், அதே கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் தீபா தனது பாட்டி கண்ணம்மாளுடன் அதே கிராமத்தில் ஆடு மேய்க்கும் இடத்துக்குச் சென்றாா். அங்குள்ள மா மரத்தடியில் தீபாவை அமர வைத்துவிட்டு, கண்ணம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். சிறிது நேரம் கழித்து அவா் வந்து பாா்த்தபோது, தீபாவைக் காணவில்லை.
தேடிப் பாா்த்தபோது, அருகிலுள்ள பெருமாள்பிள்ளையின் விவசாயக் கிணற்றில் தீபா தவறி விழுந்து மூழ்கியது தெரியவந்தது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கிய தீபாவை சடலமாக மீட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.