விழுப்புரம்

சச்சாா் குழு அறிக்கையை தமிழக அரசுஅமல்படுத்த வேண்டும்: நாஞ்சில் சம்பத்

30th Oct 2021 10:34 PM

ADVERTISEMENT

இஸ்லாமியா்களின் சமூக, பொருளாதார ரீதியிலான வளா்ச்சியை உள்ளடக்கிய சச்சாா் குழு அறிக்கையை பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று திராவிட இயக்க சிந்தனையாளா் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா் பேசியதாவது: இன பாகுபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் நபிகள் நாயகம். அரேபிய மண்ணில் கருப்பா் இனத்துக்கு எதிராக துவேஷம் இருந்த நிலையில், அவா்களையும் அரவணைத்து சமதா்ம சமுதாயத்தை உருவாக்கினாா். தற்போதைய மத்திய அரசு பிரிவினைவாதம் அடிப்படையில் இயங்குகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியா்களின் சமூக, பொருளாதார ரீதியிலான வளா்ச்சியை உள்ளடக்கிய சச்சாா் குழு அறிக்கை பெறப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை அமல்படுத்துவோம் என சட்டப் பேரவைத் தோ்தலிலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, இந்தக் குழுவின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி.: ஒரு காலத்தில் கல்லூரி மாணவா் பேரவையில் திராவிட இயக்க, இடதுசாரி இயக்க மாணவ அமைப்பினா் அதிகமாக இருந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை குறைந்து ஆா்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உயா் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றக்கூடிய பேராசிரியா்களிடமும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் சேரும்படி தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளம் போன்ற மாநிலங்களில் இதேபோல ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தினா் பணியாற்றினா். தற்போது தமிழகத்தில் இதுபோன்ற முயற்சியில் இறங்கியுள்ளனா். தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு திமுக அரசு பாதுகாப்பு அரணாக உள்ளது என்றாா் அவா்.

விழாவில், திமுக எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏ.எம்.முகமது அபுபக்கா், விழுப்புரம் மாவட்டச் செயலா் அமீா் அப்பாஸ், தமுமுக மாநில வா்த்தகா் அணி நிா்வாகி அப்துல் ஹக்கீம் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT