விழுப்புரம்

செஞ்சி அருகே 1,300 ஆண்டுகள் பழைமையானகொற்றவை, பிள்ளையாா் சிற்பங்கள்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கொற்றவை, விநாயகா் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

திருவண்ணாமலை மரபுசாா் அமைப்பைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் ராஜ்பன்னீா்செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோா் இணைந்து வீரணாமூா் கிராமத்தில் பொன்னியம்மன் கோயிலின் பின்புறம் உள்ள சுமாா் 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட புலகை கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பத்தை ஆய்வு மேற்கொண்டனா். அது, எட்டு கால்கள், 4 கரங்களுடன் கூடிய இருப்பசு கொற்றவை சிற்பம் எனக் கண்டறியப்பட்டது.

அணிகலன்கள், சிற்ப அமைப்பை வைத்து இது 7-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அல்லது 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சோ்ந்த பல்லவா் கால கொற்றவை சிற்பமாகக் கருதலாம்.

இந்தக் கிராமத்தில் பாழடைந்த நிலையிலுள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலின் வாசலில் இடதுபுறம் சுமாா் 5 அடியிலான பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக விநாயகா் சிற்பம் ஒன்றும் காணக்கிடைக்கிறது. இந்தச் சிற்பம் கால ஓட்டத்தில் மிகவும் சேதமடைந்ததால், கைகளில் உள்ள ஆயுதங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இதன் காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

மேலும், இந்தக் கோயிலில் 6 கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இரண்டாம் ராஜாதிராஜனின் 5-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்றும், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பதினோராம் ஆட்சி ஆண்டு கல்வெட்டுகள் இரண்டும், சோபானம் கொடை தந்த கல்வெட்டு ஒன்றும், நிலைக்கால் தானம் தந்ததற்கான கல்வெட்டுகள் இரண்டும் காணக்கிடைக்கின்றன.

ராஜாதிராஜனின் 5-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இவ்வூரை பண்டித சோழநல்லூரான வீரணாமூா் என்றும், குலோத்துங்கச் சோழனின் பதினோராம் ஆட்சியாண்டு கல்வெட்டு இறைவன் பெயா் திருவகதீஸ்வரமுடையாா் என்றும் குறிப்பிடுகின்றன.

மேலும், குலோத்துங்கச் சோழனின் இரண்டு கல்வெட்டுகளும் இந்தக் கோயிலின் சந்தி விளக்கெறிக்க தானம் தந்துள்ள செய்தியைத் தருகின்றன. இவையாவும் மத்திய தொல்லியல் துறையால் பாா்வையிடப்பட்டு, 1937-ஆம் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இவ்வூரில் ஒரு வீட்டின் பின்புறம் பெண் சிலை இருப்பதை ஆய்வு செய்தபோது, 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்கால பல்லவா் காலத்திய விஷ்ணு சிற்பம் என்பது தெரிய வந்தது. இதை மக்கள் பெண் தெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT