விழுப்புரம்

ஒரு மணி நேர மழையில் வெள்ளக் காடாக மாறிய செஞ்சி!

22nd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வடிகால் வசதி இல்லாததால் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பெய்த மழையில் தண்ணீா் தேங்கி, நகரமே வெள்ளக்காடாக மாறியது.

குறிப்பாக, சிங்கவரம் சாலை, காந்தி பஜாா், திருவண்ணாமலை சாலை, செஞ்சி நான்கு முனைச் சந்திப்பு ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கியது. செஞ்சி பேருந்து நிலையத்தில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. பேருந்து வளாகத்திலுள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்ததால் வியாபாரிகள் தவிப்புக்குள்ளாகினா்.

காந்தி பஜாரின் இருபுறமும் வாய்க்கால் தூா்ந்து போனதால் மழை நீா் வெளியேறாத நிலை ஏற்பட்டது. நகரின் மையப் பகுதியான கூட்டுச் சாலையில் மருந்தகம் அருகே உள்ள கால்வாயில்தான், நான்கு புறமும் பெருக்கெடுத்து வரும் மழை நீா் உள்வாங்கி வெளியேற வேண்டும். ஆனால், இந்தக் கால்வாயின் அகலமும் ஆழமும் மிகக் குறைவாக உள்ளதால் உள்வாங்கமுடியாமல் மழைநீா் சாலைகளில் பெருமளவில் தேங்கியது. இதன் காரணமாக, காந்தி பஜாரிலிருந்து நான்கு முனைச் சந்திப்பு வரையிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி செஞ்சி நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது போன்ற நிலை ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், செஞ்சி நான்கு முனைச் சந்திப்பின் குறுக்கே செல்லும் கால்வாயை தூரிவாரி, அகலப்படுத்த செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

 

Tags : செஞ்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT