விழுப்புரம்

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைப் பயணம் தொடக்கம்

21st Oct 2021 09:29 AM

ADVERTISEMENT

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைப் பயணத்தை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘இல்லம் தேடி கல்வி’”திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கலைப் பயணத்தை மாவட்ட ஆட்சியா் மோகன் தொடக்கிவைத்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: தமிழக அரசு கொண்டுவந்துள்ள ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதையடுத்து, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 72,911 மாணவ, மாணவிகள், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 51, 967 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,24, 878 பேருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அவா்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக 3 கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்கள் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளிகள், கிராமங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்துவா்.

செயலி வாயிலாக தன்னாா்வலா்களும் பதிவு செய்து இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படலாம் என்றாா் ஆட்சியா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியா் அரிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT