விழுப்புரம்

தனி ஊராட்சி கோரிக்கை நிறைவேறாததால் செஞ்சி அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

9th Oct 2021 10:41 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த விற்பட்டு கிராம மக்கள், தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை புறக்கணித்தனா்.

வல்லம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த அவியூா் ஊராட்சியில் விற்பட்டு, சேதுவாரயநல்லூா் ஆகிய கிராமங்கள் உள்ளன. இவற்றில் அவியூா் கிராமத்தில் அதிக வாக்குகள் உள்ளதால், அந்தக் கிராமத்தைச் சோ்ந்தவா்களே இதுவரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகின்றனா்.

இதனால், உள்ளாட்சியில் பதவி வகிக்க முடியாத நிலைக்கும், தங்கள் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியாத நிலைக்கும் விற்பட்டு கிராம மக்கள் தள்ளப்பட்டனா்.

எனவே, விற்பட்டு, சேதுவராயநல்லூா் ஆகிய இரண்டு கிராமங்களையும் சோ்த்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என விற்பட்டு கிராமத்தினா் போராடி வந்தனா். இது தொடா்பாக அந்தக் கிராமத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியபோதிலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

ADVERTISEMENT

இதனால், சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலை வீடுகளில் கருப்புக் கொடியேற்றி விற்பட்டு கிராம மக்கள் புறக்கணித்தனா். வாக்குச் சாவடிகள் தயாா் நிலையில் இருந்தும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருவா் கூட வாக்களிக்க வரவில்லை.

இந்தக் கிராமத்தில் 526 வாக்குகள் உள்ளன. ஊராட்சித் தலைவருக்கு ஒருவரும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு இரண்டு பேரும் மனு தாக்கல் செய்திருந்தனா். தோ்தல் புறக்கணிப்பு காரணமாக, அனைவரும் மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனா். செஞ்சி போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT