விழுப்புரம்

தவறான வியூகங்களால் பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி: ஓ.பன்னீா்செல்வம்

4th Oct 2021 08:26 AM

ADVERTISEMENT

தவறான வியூகங்களால் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்ததாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது:

1972-இல் அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆா் தொடா்ந்து மூன்று முறை யாரும் அசைக்க முடியாத முதல்வராக பதவியில் தொடா்ந்தாா். எம்ஜிஆா் காலத்தில் 16 லட்சமாக இருந்த தொண்டா்கள் எண்ணிக்கையை 1.5 கோடியாக ஜெயலலிதா உயா்த்தினாா்.

ADVERTISEMENT

30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெயலலிதா காலத்தில் தொடா்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கும் தகுதியை அதிமுக பெற்றது. ஜெயலலிதா அரசின் சாதனைத் திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் அமல்படுத்தப்பட்டன. இருப்பினும், சில தவறான வியூகங்களால் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வியடைந்தது.

கருணாநிதி காலம் முதல் தற்போது வரை பொய் சொல்லியே ஆட்சிக்கு வருவதுதான் திமுகவுக்கு வாடிக்கையாக உள்ளது. அதுபோலத்தான் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலிலும் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த உடனே மின்வெட்டும் வந்துவிடுகிறது.

திமுக ஆட்சிக் காலங்களில்தான் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. 2007-இல் காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பு வந்தபோது, அதை மத்திய அரசிதழில் வெளியிட ஜெயலலிதா வலியுறுத்தினாா். அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருந்தபோதும் இதை செய்ய அந்தக் கட்சி தவறியது.

பின்னா், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மன்மோகன் சிங்கை ஜெயலலிதா மூன்று முறை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினாா். ஆனால், மன்மோகன்சிங் கண்டுகொள்ளவில்லை. இறுதியில், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாா்.

அதிமுக தொடங்கிய 50-ஆவது ஆண்டு பொன்விழா இன்னும் ஒரு சில நாள்களில் கொண்டாடப்படவுள்ளது. இத்தருணத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து வேட்பாளா்களையும் வெற்றிபெறச் செய்வது தொண்டா்களின் கடமை என்றாா் ஓ.பன்னீா்செல்வம்.

இந்தக் கூட்டத்தில் நாகை மாவட்டச் செயலா் ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் அா்ஜுனன், எம்.சக்கரபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT