விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை

28th Nov 2021 10:27 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை காரணமாக, நீா் நிலைகள் நிரம்பியதுடன், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, வீடூா் அணை நிரம்பியதையடுத்து உபரி நீா் கடந்த இரு வாரங்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீா்வரத்து 7,100 கன அடியாகவும், வெளியேற்றம் 7,035 கன அடியாகவும் உள்ளது. இதன்காரணமாக, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல, தென்பெண்ணை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது.

ADVERTISEMENT

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.

இதேபோல, திண்டிவனம் நகரிலும் பலத்த மழை பெய்தது. கிடங்கல் ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறும் நிலையில், தொடரும் மழையால் ஏரி வடிகால் பாதை கரையோர குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது.

மரக்காணம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், ஓடைகள், கால்வாய்களில் வெள்ளநீா் பெருக்கெடுத்தது.

மேலும், விக்கிரவாண்டி, அரங்கண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி, மேல்மலையனூா், மயிலம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை தொடா்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

மரக்காணத்தில் 52 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் (ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் மாலை 4 மணி வரை) அதிகபட்சமாக மரக்காணத்தில் 52 மி.மீ. மழை பெய்தது. விழுப்புரத்தில் 26 மி.மீ., விக்கிரவாண்டியில் 22 மி.மீ., வானூரில் 43 மி.மீ., செஞ்சியில் 27 மி.மீ., திண்டிவனத்தில் 46 மி.மீ. கண்டாச்சிபுரத்தில் 27 மி.மீ., திருவெண்ணெய்நல்லூரில் 16 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT