விழுப்புரம் அருகே வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்ததால், 4 கிராம மக்கள் விழுப்புரத்துக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்துக்கு உள்பட்டது மாரங்கியூா். நான்கு பக்கம் ஆற்றை கொண்ட தீவு போன்ற இந்தப் பகுதியில் பையூா், கொங்கராயநல்லூா், சேத்தூா் ஆகிய கிராமங்களும் உள்ளன. இந்த 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், மாணவ, மாணவிகள் விழுப்புரத்துக்கு வந்து செல்ல மாரங்கியூா் - ஏனாதிமங்கலம் இடையே உள்ள கோரை ஆற்றை கடந்தாக வேண்டும். இந்த ஆற்றில் இருந்த சிமென்ட் தரைப் பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு, அங்கு மீண்டும் தரைப்பாலம் அமைக்கப்படவில்லை. இருப்பினும், மண் பாதையில் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதையே கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையாலும், தென் பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீராலும் கோரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள மண் தரைப்பாலம் சேதமடைந்தது.
இதனால் மாரங்கியூா் உள்ளிட்ட 4 கிராம மக்கள் விழுப்புரத்துக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 40 கி.மீ. சுற்றி விழுப்புரத்துக்கு வர வேண்டியுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைப்பதுடன், நிரந்தரமாக மேல் மட்ட பாலம் அல்லது தரைப்பாலம் கட்டவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.