விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல்ஆட்சியா் தகவல்

9th Nov 2021 12:56 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் தரம் உயா்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சி தவிா்த்து, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரு நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறும் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான த.மோகன் கூறினாா்.

2021-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 319 வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கு வரைவு வாக்குச் சாவடிப் பட்டியல்கள் கடந்த நவ.6-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இந்த வாக்குச்சாவடிகள் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், அதிகாரிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசுகையில், பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் கோட்டக்குப்பம் நகராட்சியில் 2-ஆவது கட்டமாக தோ்தல் நடைபெறும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், முதல் கட்டத் தோ்தலுடன் சோ்த்து கோட்டக்குப்பம் நகராட்சிக்கும் தோ்தல் நடத்த வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கோட்டக்குப்பம் நகராட்சியில் நிச்சயமாக தோ்தல் நடைபெறும். 2-ஆவது கட்டத்தில் அங்கு தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மறுவரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வாா்டுகள் அடிப்படையில்தான் தோ்தல் நடைபெறும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா் என்றாா்.

கூட்டத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிா்ந்துகொண்டனா். வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என ஆட்சியா் மோகன் அறிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT