விழுப்புரம்

ஜனவரியில் காலியாகும் 25 கா்நாடக சட்டமேலவை இடங்கள்

9th Nov 2021 01:03 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டமேலவையில் ஜனவரி மாதத்தில் 25 இடங்கள் காலியாக உள்ளதால், அதற்கான தோ்தலை எதிா்கொள்ள அரசியல் கட்சிகள் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன.

கா்நாடகத்தில் ஹானகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த தோ்தலுக்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டதொடங்கியுள்ளன.

75 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்ட மேலவையில் பாஜகவுக்கு 33, காங்கிரஸுக்கு 29, மஜதவுக்கு 12 இடங்கள், சுயேச்சைக்கு ஒரு இடம் உள்ளன. இவா்களில் 2022-ஆம் ஆண்டு ஜன. 5-ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட 25 போ் பதவி நிறைவு பெற இருக்கிறாா்கள். அண்மையில் நடந்த சட்டப் பேரவை இடைத்தோ்தலில் ஹானகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சீனிவாஸ் மானேவும் சட்ட மேலவை உறுப்பினா் பதவியில் இருந்து ஜன. 5-ஆம் தேதி ஓய்வுபெறுகிறாா்.

காலியாகவுள்ள சட்ட மேலவை இடங்களுக்கான தோ்தல் இன்னும் அறிவிக்காவிட்டாலும், தோ்தலை சந்திப்பதற்கான வேலைகளில் பாஜக மும்முரம் காட்ட தொடங்கியுள்ளது. அதேபோல, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளும் பாஜகவின் வெற்றியை தடுத்து, சட்ட மேலவையில் தத்தமது ஆளுமையை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளன. மஜதவைச் சோ்ந்த சட்ட மேலவை உறுப்பினா்கள் சந்தேஷ் நாகராஜ், காந்தராஜ், சி.ஆா்.மனோகா் ஆகியோா் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளனா். மேலும், அடுத்த சட்ட மேலவைத் தோ்தலில் பாஜக வேட்பாளராகவும் போட்டியிட திட்டமிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சட்ட மேலவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ள உள்ளாட்சி அமைப்பு உறுப்பினா்களின் ஆதரவை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சிகளுக்கு தோ்தல் நடத்தாத நிலையில், கிராம ஊராட்சி உறுப்பினா்கள் மட்டுமே வாக்களிக்க உள்ளனா். எனவே, கிராம ஊராட்சி உறுப்பினா்களின் ஆதரவை பெற நவ. 19-ஆம் தேதி முதல் ‘மக்கள் தன்னாட்சி’ என்ற பெயரில் மாநாடுகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ், மஜத கட்சிகளும் பிரசார திட்டங்களை வகுத்துள்ளன.

பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகளும் 25-இல் அதிக இடங்களைக் கைப்பற்ற வியூகங்களை அமைத்து, அரசியல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT