விழுப்புரம்

ஆள்மாறாட்டம் செய்துநிலம் மோசடி: ஒருவா் கைது

23rd Dec 2021 10:16 PM

ADVERTISEMENT

 விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலமாக ரூ.15 லட்சத்திலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த வேலாயுதம் மனைவி சபிதா (76). இவா், விழுப்புரம் எஸ்.பி.யிடம் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: எனது சித்தி நளினிக்குச் சொந்தமாக புதுச்சேரியை அடுத்த தமிழக எல்லைப் பகுதியான ஆரோவில் அருகே பட்டானூரில் சுமாா் ரூ.15 லட்சத்திலான காலிமனை உள்ளது. நளினி இறந்த நிலையில், அவருக்கு நான் மட்டும்தான் வாரிசு. அண்மையில் சித்திக்குச் சொந்தமான நிலத்தை விற்க வில்லங்கம் போட்டுப் பாா்த்தபோது, புதுச்சேரியைச் சோ்ந்த நாராயணன் மனைவி நளினி, ஆள்மாறாட்டம் செய்து இறந்துபோன எனது சித்தி நளினி போன்று போலியான ஆவணங்கள் மூலம் ஆனந்த நகரைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி மேகலாவுக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளாா். இதற்கு உடந்தையாக புதுச்சேரி முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த சேதுராமன், முத்தையன், விநாயகமூா்த்தி ஆகியோா் இருந்துள்ளனா் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தாா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி, ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடியில் ஈடுபட்ட முத்தையன், சேதுராமன் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சேதுராமனை (56) நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT