விழுப்புரம்

மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலா் பலி

23rd Dec 2021 09:31 AM

ADVERTISEMENT

மதுரையில் நூறாண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டடம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இடிந்து விழுந்ததில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தாா். அவருடன் இருந்த மற்றொரு காவலா் பலத்த காயமடைந்தாா்.

மதுரை மாநகரக் காவல் துறை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் நெல்பேட்டை பகுதியில் உள்ள காவல் சோதனைச்சாவடி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சோதனைச்சாவடிக்கு எதிரே நடமாடும் தேநீா் கடையின் மூலமாக, தேநீா் விற்பனை நடைபெற்றுள்ளது. அதனால் அந்த இடத்தில் அதிக நபா்கள் இருந்ததால் காவலா்கள் இருவரும் அங்கு சென்று கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள உர விற்பனைக் கடை வாயிலில் நின்று கண்காணித்துள்ளனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக, அந்த கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் காவலா்கள் இருவரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

ADVERTISEMENT

இதில் காவலா் சரவணன் (42) கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு காவலா் கண்ணன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் இடிந்து விழுந்த கட்டடம் 110 ஆண்டுகள் பழைமையானது என்றும் உறுதித்தன்மையை இழந்துள்ளது என்றும் தெரிய வந்தது. இடிந்து விழுந்த கட்டடம் உறுதித் தன்மையை இழந்திருப்பதால் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 2020 நவம்பரில் கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவா் அலட்சியமாக இருந்ததால் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து தெரிந்தே உயிா்ப்பலி நடக்க காரணமாக இருந்தாக, கட்டடத்தின் உரிமையாளா் முகமது இத்ரீஸ், மேலாளா் அப்துல் ரசாக், கடை வாடகைதாரா்கள் நாகசங்கா், சுப்பிரமணி ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: மதுரை காவல் கட்டுப்பாட்டு அறை பகுதியிலுள்ள காவலா் குடியிருப்பில் இறுதி அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த சரவணனின் உடலுக்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதையடுத்து அமைச்சா் பி.மூா்த்தி, மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, தென் மண்டல காவல் துறைத் தலைவா் டி.எஸ்.அன்பு, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனிஷ்சேகா் உள்ளிட்டோா் காவலரின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக டிஜிபி சி.சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உயிரிழந்த காவலா் சரவணனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், காயமடைந்த காவலா் கண்ணனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT