விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து திண்டிவனம் அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பயணிக்க தனித்தனியாக 2 அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
செஞ்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து காலை வேளையில் இயக்கப்பட்ட ஒரே அரசுப் பேருந்தின் மூலம் கல்லூரிக்குச் சென்று வந்த நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அண்மையில் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக 2 அரசுப் பேருந்துகளை இயக்க ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தாா்.
அதன்படி, அமைச்சா் செஞ்சி மஸ்தானின் அறிவுறுத்தலின்பேரில், செஞ்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சாா்பில், திண்டிவனம் அரசுக் கலைக் கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள் பயணிக்க ஓா் அரசுப் பேருந்தும், மாணவிகள் பயணிக்க ஓா் அரசுப் பேருந்தும் என 2 அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தங்களின் கோரிக்கையை ஏற்று ஒரு வாரத்துக்குள் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனா்.