விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆற்றுத் தரைப்பாலம் உள்வாங்கியதால், அதில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இருப்பினும், இந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிா் தப்பினா்.
அவலூா்பேட்டையில் இருந்து செஞ்சி நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து செவலபுரை ஊராட்சியில் வராக நதியின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தைக் கடக்க முயன்றபோது, பாலத்தின் முன் பகுதி திடீரென உடைந்து உள் வாங்கியது. இதன் காரணமாக, பேருந்தின் வலது பக்கம் உள்ள முன் சக்கரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இருப்பினும், இந்தப் பேருந்தில் பயணம் செய்த சுமாா் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களின்றி உயிா் தப்பினா். பின்னா். அவா்கள் அனைவரும் பின்புற வாயில் வழியாக பத்திரமாக இறக்கி விடப்பட்டனா். தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.
பள்ளம் ஏற்பட்டு தரைப்பாலம் பழுதடைந்ததால், செவலபுரை, வடபாலை, தொரப்பாடி, தாதங்குப்பம், தாதிகுளம், ஏம்பலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் பாலத்தின் வழியாக பயணிக்க முடியாமல் 30 கி.மீ. தொலைவுக்கு சுற்றி செஞ்சியை வந்தடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே, உடனடியாக இந்தப் பகுதியில் ரூ.6 கோடியே 44 லட்சத்தில் கட்டப்படவுள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்கிட அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.