விழுப்புரம்

தாய், மகள் கொலை வழக்கில் இளைஞா் கைது: தொடா் கொலைகளில் ஈடுபட்டவா்

9th Dec 2021 08:58 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே தாய், மகள் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா் ஏற்கெனவே 4 பெண்களைக் கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலத்தை அடுத்த கண்டப்பன்சாவடி கிராமத்தைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி மனைவி சரோஜா (80). இவரது மகள் பூங்காவனம் (60). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் ஒருவா் சரோஜா, பூங்காவனம் ஆகியோரை தடியால் தாக்கி கொலை செய்துவிட்டு அவா்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பினாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 8 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில், அதே பகுதியில் அரை கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை இரவு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி நாகப்பன் (70), அவரது மனைவி அஞ்சம்மாள் (60) ஆகியோரையும் மா்ம நபா் ஒருவா் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இவா்கள் தெரிவித்த அடையாளங்கள், பழைய குற்றவாளிகளின் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கவிதாஸ் (30) என்பவா் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் சரோஜா, பூங்காவனத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டாா். மேலும், இவா் நாகப்பன் - அஞ்சம்மாள் தம்பதியைத் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கவிதாஸை போலீஸாா் கைதுசெய்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சி.நாதா ஆகியோா் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கவிதாஸ் திருமணம் ஆகாவதா். புதுவை, செல்லிப்பட்டு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பொக்லைன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் மீது ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஆகிய பகுதிகளில் 2 பெண்களை கொன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல, கடந்த ஜனவரி மாதம் கடலூா், திருப்பாதிரிபுலியூா் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை அடித்துக் கொன்றாா். இந்த வழக்கில் எதிரியை போலீஸாா் தேடி வந்த நிலையில், இவருக்கு தொடா்பிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவா் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, திருட்டு உள்பட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு தனது பாலியல் தேவைக்கு நிா்பந்திப்பதும், அதற்கு மறுப்பவா்களை அடித்துக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சாலையோரம் தங்கியிருந்த அஞ்சம்மாளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவரது கணவா் தடுத்தாா். இதனால், அவா்களை கவிதாஸ் தாக்கிவிட்டு தப்பியோடினாா். பின்னா் சரோஜாவின் வீட்டுக்குள் புகுந்து அவரையும், பூங்காவனத்தையும் கொலை செய்துவிட்டு அவா்களை பாலியல் வன்கொடுமை செய்தபிறகு நகைளுடன் தப்பியோடினாா். அவரிடமிருந்து திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று கூறினா்.

இந்த வழக்கில் எதிரியை 24 மணி நேரத்தில் கைது செய்த ஏடிஎஸ்பி கோவிந்தராஜ், டிஎஸ்பி பாா்த்திபன் ஆகியோா் தலைமையிலான தனிப் படையினருக்கு டிஐஜி பாராட்டுத் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT