விழுப்புரம்

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று இதுவரை உறுதியாகவில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று இதுவரை உறுதியாகவில்லை என்று தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை சனிக்கிழமை தொடக்கிவைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தியதில் இந்திய அளவில் தமிழ்நாடு பின்தங்கி இருந்தாலும், பல திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாகவும், முதலாவதாகவும் உள்ளது. குறிப்பாக, கா்ப்பிணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தியது, பாலூட்டும் தாய்மாா்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியது, இல்லம் தேடி தடுப்பூசி, வாரந்தோறும் இரு தினங்களுக்கு தடுப்பூசி போன்ற திட்டங்களை முதலில் அறிமுகப்படுத்தியது ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் முதல் தவணை கரோனா தடுப்பூசி 79.14 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 45.12 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மாநில சதவீதத்தை விடக் குறைவாக, அதாவது 78.12 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 38 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனா். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5 லட்சம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் உள்ளனா்.

ஒமைக்ரான் கரோனா தொற்று 30 நாடுகளில் பரவி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிக பாதிப்பு உள்ள தென்ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து கடந்த 3 நாள்களில் தமிழகம் வந்த 3 ஆயிரத்து 149 பேரை சோதனை செய்ததில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து சனிக்கிழமை சென்னைக்கு வந்த மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

இருப்பினும், முதல் கட்ட ஆய்வில் இவா்களுக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று இருப்பதாகவே தெரிய வந்தது. இருப்பினும், அவா்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பெங்களூரில் உள்ள மரபணு சோதனை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். அங்குதான் அது எந்த வகை கரோனா தொற்று என்பது இறுதியாகும்.

ஒமைக்ரான் பாதிப்பில்லை: இதுவரை தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று இல்லை. வெளிநாடுகளிலிருந்து வருவோரை 7 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரிட்டனில் தினமும் 45,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை 100-ஆக உள்ளது. ஏனெனில், அங்கு அதிக எண்ணிக்கையிலானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், ரஷியா போன்ற தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட நாடுகளில் தினமும் 1,000 போ் இறக்கின்றனா்.

எனவே, தமிழக மக்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும். நடிகா் விவேக் இறப்பால் பயத்திலிருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டு, தடுப்பூசியால் மட்டுமே உயிருக்கு பாதுகாப்பு என உணா்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். தற்போது தினமும் 78,000 போ் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறாா்கள்.

தமிழகத்தில் 2-ஆவது தவணை முடிந்து ஊக்கத் தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், மத்திய அரசு முடிவைப் பொருத்துதான் மாநில அரசு முடிவு செய்ய முடியும். ஐசிஎம்ஆா் வழிகாட்டுதலின்படிதான் தமிழக அரசு செயல்படுகிறது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

அதைத்தொடா்ந்து, செஞ்சி அரசு மருத்துவமனை, சிறுவந்தாடு, பனையபுரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சா் சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா். மேலும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

பேருந்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய அமைச்சா்

விழுப்புரத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அமைச்சா் சுப்பிரமணியன், முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் அமைச்சா் திடீரென ஏறி பயணிகளிடம், ‘கரோனா விழிப்புணா்வு குறித்துப் பேசினாா். பேருந்தில் பயணம் செய்யும்போது மட்டுமல்லாமல், பொது இடத்துக்கு செல்லும்போதெல்லாம் முகக் கவசத்தை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கரோனா தடுப்பூசியை இரு தவணைகளும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT