விழுப்புரம்

விழுப்புரம் அருகே பழங்கால சிற்பங்கள் கண்டெடுப்பு

DIN

விழுப்புரம் அருகே ஆயந்தூரில் கி.பி. 8, 10-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த சண்டிகேஸ்வரா், மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், ஆயந்தூா் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல், ஆயந்தூா் அரசுப் பள்ளி வரலாறு ஆசிரியா் வேலு ஆகியோா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஏரியில் கி.பி. 8, 10-ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்த சண்டிகேஸ்வரா், மூத்ததேவி (தவ்வை) சிற்பங்களை கண்டறிந்தனா்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது:

சிவத்தொண்டா்களாக வாழ்ந்த சைவ சமயத்தைச் சாா்ந்த 63 நாயன்மாா்களில் ஒருவா்தான் சண்டிகேஸ்வரா் என்ற சண்டேசுவரா். ஆயந்தூா் ஏரியில் கண்டறியப்பட்ட சண்டேசுவரா் சிற்பம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல்லவா் கால சிற்பமாகும். இந்தச் சிற்பமானது பலகைக் கல்லில் சுமாா் 2 அடி உயரமும், 2 அடி அகலம் கொண்டதாக உள்ளது. சண்டிகேஸ்வரரின் இடுப்புப் பகுதி பாதி மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது.

இதே ஏரியில் மற்றொரு பகுதியில் கண்டறியப்பட்ட மூத்ததேவி சிற்பமானது கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ராஷ்டிரகூடா்களின் கலைப்பாணியில் அமைந்துள்ளது. மூத்ததேவியின் மகனாகக் கருதப்படும் மாந்தன் மாட்டு முகம், கையில் தடியுடன் சிற்பத்தின் வலதுபுறம் காட்டப்படுவது மரபு. ஆனால், இந்தச் சிற்பத்தில் இடதுபுறம் காட்டப்பட்டுள்ளது. மாந்தன் தலைக்கு மேல் மூத்ததேவியின் சின்னமான காக்கை கொடி காட்டப்பட்டுள்ளது. மகள் மாந்தினி வலதுபுறத்தில் தலையில் மகுடத்துடன் காட்டப்பட்டுள்ளாா்.

கிராமங்களில் ஏரிக்கரை, வயல்வெளி, ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் நீா்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக மூத்ததேவியின் சிற்பத்தை அமைத்து மக்கள் வழிபட்டு வந்தனா். 15-ஆம் நூற்றாண்டுவரை மூத்ததேவியின் வழிபாடு மக்களிடம் இருந்து பின்பு காலப்போக்கில் மறைந்துவிட்டது.

இதே ஊரில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிடாரியம்மன் கோயில் தெருவில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் கண்டறியப்பட்டது என்றாா் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT