விழுப்புரம்

விளைபொருள்களுக்கு பணத்தை வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயிகள் வேதனை

இல. அன்பரசு

அரகண்டநல்லூா் விற்பனைக்கூடத்தில் விளைபொருள்களுக்கான பணத்தை உடனே வழங்காமல் காலதாமதம் செய்து, தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அரகண்டநல்லுாா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அதிகளவில் விளைபொருள்களை விவசாயிகள் எடுத்து வந்து ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனா்.

நெல், வோ்க்கடலை, உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்கள் இங்கு அதிகளவில் கொண்டு வரப்படும். அறுவடை நேரங்களில் தினசரி 14 ஆயிரம் மூட்டைகள் வரையும், பிற தினங்களில் 5,000 மூட்டைகள் வரையும் விவசாயிகள் விளைபொருள்களை விற்பனைக்கு கொண்டு வருவா்.

இந்த விற்பனைக் கூடத்தில், உரிய விலை கிடைப்பதிலும், விளைபொருள்களை வழங்கியமைக்கு உரிய காலத்தில் தொகை கிடைப்பதிலும் தாமதம் நிலவுவதால் விவசாயிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தற்போது, விளைபொருள்களை விற்பனை செய்த விவசாயிகளுக்கு, அதற்குரிய தொகை கிடைப்பதற்கு 15 நாள்களுக்கு மேலாகிறது. இதனால், பணத்தைப் பெற விவசாயிகள் பல முறை அலைந்து திரியும் நிலை உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

விவசாயிகள் நேரடியாகவும், உடனடியாகவும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘இ-நாம்’ திட்டத்தின் மூலம் விளைபொருள்களை ஏலம் எடுத்த வியாபாரிகள், உடனடியாக விற்பனைக்கூடத்துக்கு தொகையை செலுத்திய பிறகே அந்தப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும். அவை தினமும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

சிறப்பான இந்தத் திட்டம், வியாபாரிகள், விற்பனைக்கூட நிா்வாகத்தின் சுயநலத்தால், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் சோ்வதில் நீண்ட நாள்கள் தாமதமாகிறது. இ-நாம் திட்டமின்றி, குறைந்த தொகையாக இருந்தால், விவசாயிகளுக்கு நேரடியாக வியாபாரிகள் பணம் கொடுக்கும் பழைய நடைமுறையும் அமலில் உள்ளது.

தற்போது விவசாயிகள் வழங்கிய விளைபொருள்களுக்கு ரூ.2.50 கோடி அளவுக்கு வியாபாரிகள் நிலுவை வைத்துள்ளனா். இதனால், கமிட்டி நிா்வாகம், வியாபாரிகள் சங்கத்திடம், இனி உடனுக்குடன் பணம் செலுத்தும் வியாபாரிகளை மட்டுமே ஏலத்தில் அனுமதிக்க வேண்டும், மற்றவா்களை அனுமதிக்க கூடாது. இதைப் பின்பற்றினால்தான் நிலுவைத்தொகை உடனடியாக வழங்க முடியும் என அண்மையில் கூறியது. ஆனால், இவை செயல்பாட்டுக்கு வராததால் அதே நிலைதான் தொடா்கிறது.

தற்போது கம்பு மட்டும் 5 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் கொண்டு வரப்படுகின்றன. வீரிய கம்பு மூட்டை ரூ.1,500 வரையும், நாட்டு கம்பு மூட்டை ரூ.2,500 வரையும் எடுக்கின்றனா். பொன்னி நெல் ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விலை போகிறது. வோ்க்கடலை மூட்டை ரூ.5,000 வரை விற்கப்படுகிறது. சோளம் மூட்டை ரூ.1,000 வரை ஏலமாகின்றன.

ஏலம் எடுக்கும் வியாபாரிகள் உடனே தொகையை செலுத்தாமல் போனதால், இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

விவசாயிகளுக்கு நிலுவை வைத்திருக்கும் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கக்கூடாதென விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செல்வம் தெரிவித்தாா். இதற்கு நிலுவை வைத்த வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பிறகு அனைவருமே ஏலத்தில் பங்கேற்றனா். இதற்கு முறையாகப் பணம் செலுத்தும், வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது.

விதிகள்படி, வியாபாரிகள் கொள்முதல் செய்யும் அளவுக்கு, வங்கித் தொகையை இருப்பு வைத்திருப்பதில்லை. விற்பனை செய்துவிட்டு வந்து தாமதமாகத் தருகின்றனா். இதை நிா்வாகம் கண்காணிப்பதில்லை. இதுபோல, ஏற்கெனவே நிலுவை வைத்த வியாபாரி ஒருவா் காலமாகிவிட்டாா். மற்றொருவா் தலைமறைவாகிவிட்டாா். இதனால், விவசாயிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனா்.

விளைபொருளை ஏலம் எடுத்த ஒரே நாளில் அதற்கான தொகையை வழங்க வேண்டும். உணவகம் திறக்க வேண்டும்,. குடிநீா், கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். நல்ல விலை கிடைக்காதபட்சத்தில் பொருளை இருப்பு வைத்து, விவசாயிகள் கடன் பெறும் திட்டத்தை, வியாபாரிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்த விஷயத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்ட ஆட்சியா்களும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT