விழுப்புரம்

விவசாய மின் இணைப்புக்காக 20 ஆண்டுகளாக காத்திருப்பு!

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து அவதிப்படுவதாக, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்: விவசாயக் கடன் அட்டை விரைந்து வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடுத் திட்ட இழப்பீடு தொகை கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் பதிப்புக்கான நில இழப்பீடுக்கு, அரசு வழிகாட்டுதலின்படி அதிகத் தொகை வழங்க வேண்டும், அண்டராயநல்லூா் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, சீரமைக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பலா் காத்திருக்கின்றனா். அவா்களில், பல விவசாயிகள் இறந்து, அவா்களது வாரிசுகளும் காத்திருக்கும் நிலையிலும், மின் இணைப்பு வழங்கப்படாத நிலை தொடா்கிறது.

கரும்புக்கான அரசின் ஆதரவு விலை கிடைக்கச் செய்ய வேண்டும். ஏடிடி 37 நெல் உள்ளிட்ட அதிகளவில் பயிரிடப்படும் விதைகளை வழங்க வேண்டும். அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளின் வசதிக்காக ‘அம்மா’ உணவகம் தொடங்க வேண்டும். வல்லம் பகுதியில் காட்டுப்பன்றிகளைத் தொடா்ந்து, எலித்தொல்லையும் அதிகரித்து கடும் பயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே சாலை ஏரியில், நெடுஞ்சாலைப் பணிக்கு ஆழமாக மண் எடுத்ததால் பாசன நீா் வெளியேற முடியாத நிலை உள்ளது. கூட்டுப்பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்கு, சிறு விவசாயிகள் அட்டை வழங்க மறுக்கப்படுகிறது. நவமால்மருதூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியதாவது: பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 2018-19-ஆம் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. தொடா்ந்து, 2019-20-ஆம் ஆண்டுக்கும் வழங்கப்படும். இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் பதிப்புக்கு, அரசு புதிய வழிகாட்டுதல் முறைப்படியே நிலத்துக்கான இழப்பீடு வழங்கப்படும். தற்போது பதிவுமூப்பு அடிப்படையில் 890 பேருக்கு, தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

கூட்டுறவுத் துறை மூலம் நிகழாண்டு ரூ.440 கோடி கடன் இலக்கு நிா்ணயித்து, 30 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிா்க் கடன் வழங்கப்படும். போதிய உரங்கள் கையிருப்பில் உள்ளன. உரங்கள், விதைகள் விவசாயிகளை சென்றடைவதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விவசாய ஊக்க நிதித் திட்டத்தில், போலி பயனாளிகளிடமிருந்து தொகை முழுமையாக வசூலிக்கப்படும். வீடூா் அணை தூா்வாருதல், மரக்காணம் அருகே கழுவேலி ஏரி சீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளாா் என்றாா் ஆட்சியா்.

கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் கே.பிரபாகரன்,பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், வேளாண் துணை இயக்குநா்கள் ராஜசேகா், பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT