விழுப்புரம்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அமைச்சா் திறந்துவைத்தாா்

DIN

விழுப்புரம் அருகே தளவானூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் கட்டப்பட்ட புதிய தடுப்பணையை அமைச்சா் சி.வி.சண்முகம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

விழுப்புரம், கடலூா் மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சாா்பில் விழுப்புரம் அருகேயுள்ள தளவானூா், எதிா்புறம் கடலூா் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்காக ரூ.25.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப் பணித் துறை சாா்பில் கடந்தாண்டு ஜனவரி மாதம் தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. இந்தப் பணி அண்மையில் முடிவடைந்தது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, தடுப்பணையை பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்.எல்.ஏ. ஆா்.முத்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா், கோட்டாட்சியா் ராஜேந்திரன், ஆவின் தலைவா் பேட்டை வி.முருகன், அதிமுக நிா்வாகிகள் ஜி.பாஸ்கரன், ஆா்.பசுபதி, ஜி.சுரேஷ்பாபு, செங்குட்டுவன், ராஜி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

நிலத்தடி நீா்மட்டம் உயரும்: 400 மீட்டா் நீளம், 3.1 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்ட இந்தத் தடுப்பணையில், தண்ணீரை இரு புறமும் வெளியேற்றும் விதமாக, தலா மூன்று மணல் போக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக விநாடிக்கு 5,105 கனஅடி நீரை வெளியேற்ற இயலும். இந்தத் தடுப்பணை மூலம் தென்பெண்ணையாற்றின் இரு மாவட்டங்களில் 13 கிராமங்கள், 87 திறந்த வெளி குடிநீா்க் கிணறுகள் நீராதாரம் பெறுவதுடன் 2,114.14 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெறும்.

மேலும், தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் மலட்டாறு, வாலாஜா, எனதிரிமங்கலம் கால்வாய்கள் வாயிலாக தண்ணீா் கொண்டு செல்லப்படுவதால் விவசாயப் பாசனம் மேம்படும், நிலத்தடி நீா்மட்டமும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT