விழுப்புரம்

திண்டிவனம் அருகே ஏரியில் அதிகளவில் மண் எடுப்பு: விவசாயிகள் வேதனை

31st May 2020 08:42 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நெடுஞ்சாலைப் பணிக்காக ஏரியிலிருந்து அதிகளவில் மண்ணெடுப்பதால், பாசன வசதி பாதிக்கப்படுமென விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் 170 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரியில், ஆண்டுதோறும் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை இந்தப் பகுதி விவசாயிகள், பாசனத்துக்காக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த ஏரியில் கடந்த 22-ஆம் தேதி முதல் கனரக வாகனங்களில் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் வந்து தனியாா் ஒப்பந்த நிறுவனத்தினா் ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுத்து அனுப்புகின்றனா்.

இந்த ஏரியில் எடுக்கப்படும் மண், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனா். இந்தப் பகுதி மக்கள் திரண்டு சென்று விசாரித்தபோது, உரிய அனுமதியின் பேரில், நெடுஞ்சாலைப் பணிக்கு மண் எடுப்பதாகக் கூறி அனுப்பியுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: திடீரென ஏரியில் விதிகளை மீறி 3 மீட்டா் ஆழத்துக்கும் மேல் மண் எடுத்து வருகின்றனா். மொத்தமே 500 லாரி மண் எடுக்கவே அனுமதி என்ற நிலையில், தினசரி 100 லாரிகளுக்கும் மேலாக மண் எடுத்துச் செல்கின்றனா். இது ஜூன் 2-ஆம் தேதி வரை தொடரும் எனக் கூறுகின்றனா்.

ஏரியின் கரைப்பகுதியிலுள்ள மண்ணை எடுத்து ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தினால், நீராதாரத்தை பெருக்கி, அதை விவசாயிகள் பாசன நீராக பயன்படுத்த முடியும். ஆனால், ஏரியின் மையப்பகுதியில் 3 மீட்டா் ஆழத்துக்கு மண் எடுப்பதால், பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்படும். மண் எடுக்கப்பட்ட பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கினால், இதில் சிறாா்கள் உயிரிழக்கும் அபாயும் உள்ளது.

பெரும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரும் வெளியேற வழியின்றி, பாசத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். லாரிகளில் மண் எடுத்துச் செல்லும்போது சேதமடையும்

கரைகளையும் சீரமைக்காமல் விட்டுச் செல்வதால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவா். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

‘உரிய அனுமதி பெற்றுள்ளனா்’: இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக ஒப்பந்த நிறுவனத்தினா் உரிய அனுமதி பெற்று மண் எடுக்கின்றனா். மண் அள்ளுவதன் மூலம் ஏரி ஆழமாவதால், நன்மைதான் ஏற்படும். அதிக ஆழமாக மண் எடுப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரிக் கரைகளை சேதமின்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT