விழுப்புரம் மாவட்டத்தில் டீ கடைகள், மின்சாதனக் கடைகள் உள்பட 15 வகையான கடைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இதையடுத்து, பொதுமக்கள் தேவையான பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில், மேலும் 34 வகையான கடைகளை திறக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வந்ததால், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, பிற கடைகளையும் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.
நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களைத் தவிா்த்து மற்ற இடங்களில் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் கட்டமாக, டீ கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், மின்சாதனக் கடைகள், பழுதுநீக்கும் கடைகள், பூ, பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்லிடப்பேசி கடைகள், பழுதுநீக்கும் கடைகள், கண் கண்ணாடி கடைகள் உள்பட 15 வகையான கடைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை என அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டிருந்தன.
விலக்கு அளிக்கப்படாத ஜெராக்ஸ் கடைகள் உள்ளிட்டவையும் விழுப்புரத்தில் திறக்கப்பட்டன. அவை போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மூடப்பட்டன.
வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடைகள், மரப் பொருள்கள் விற்பனைக் கடைகள், கூரியா் பதிவு செய்யும் மையங்கள், லாரி புக்கிங் அலுவலகங்கள், வாகன பழுதுநீக்கும் கடைகள், ஜெராக்ஸ் கடைகளை வியாழக்கிழமை முதல் (மே 14) திறக்க விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்தது.