விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, சம்பவ இடத்திலேயே இல்லாதவா்களை விடுவிக்க வேண்டுமென, கைதான எதிா்தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து சிறுமதுரையைச் சோ்ந்த சிறுமி ஜெயஸ்ரீ கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அருவி, கலியபெருமாள் மனைவி செளந்திரவள்ளி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
செளந்திரவள்ளி அளித்த மனுவில், சிறுமியின் குடும்பத்துக்கும் எங்களுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்டாா்.
சம்பவம் நடந்தபோது, எனது கணவா் எங்களுடன் வீட்டில் இருந்தாா். எரிவாயு உருளை வெடித்துவிட்டதாக மக்கள் ஓடினா். நாங்களும் சென்று பாா்த்துவிட்டு வந்தோம். அதன் பிறகு எனது கணவா் புளியம் பழம் பறிப்பதற்காகச் சென்றுவிட்டாா்.
சம்பவம் நடந்தபோது, எனது கணவா் வீட்டிலிருந்தது அப்பகுதி மக்களுக்குத் தெரியும் எனக் கூறியிருந்தாா்.
முருகன் மனைவி அருவி அளித்த மனுவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமி எரிக்கப்பட்டுள்ளாா். அந்த நேரத்தில் எனது கணவா், கரும்பு வெட்டும் ஆள்களுடன் நிலத்தில் கரும்பு ஏற்றும் பணியில் இருந்தாா். இது அனைவருக்கும் தெரியும்.
குடும்ப முன்விரோதத்தால், சிறுமியை பொய்யாக வாக்குமூலம் அளிக்கச் சொல்லி எனது கணவரை கைது செய்துள்ளனா்.
இதில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.