தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கும் மரக்காணத்தில் உப்பு உற்பத்தித் தொழில் முடங்கியதால் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சுற்று வட்டாரப் பகுதிகளில், அரசுக்குச் சொந்தமான 3,500 ஏக்கா் பரப்பளவிலான இடங்களில் உப்பளங்கள் உள்ளன. இதில் ஒப்பந்த அடிப்படையில் அந்தப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உப்பு உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனா்.
சுமாா் 3 ஆயிரம் தொழிலாளா்கள் இதில் ஈடுபட்டுள்ளனா். ஆண்டுதோறும் 20 முதல் 30 லட்சம் டன் அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகம் மட்டுமன்றி புதுவை, கேரள மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். மாா்ச் முதல் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை உற்பத்தி நடக்கும். மழை குறுக்கிடாத வரை உற்பத்தி தொடரும்.
நிகழாண்டும் ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டன. பிப்ரவரியில் உப்பு உற்பத்தி தொடங்கி நடைபெற்றது.
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மாா்ச் மாதத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வேலையிழப்பு: இதுகுறித்து உப்பளத் தொழிலாளா்கள் கூறியதாவது:
மரக்காணத்தில் உற்பத்தியாகும் உப்பு சென்னை, கடலூா், புதுவை, கேரளம், தெலுங்கானா பகுதிகளிலுள்ள மீன்பிடி துறைமுகங்களுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
பொது முடக்கத்தால் மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டு, துறைமுகங்களும் வெறிச்சோடிக் காணப்படுவதால் உப்புக்கான தேவையும் குறைந்தது. கடந்தாண்டுகளில் 75 கிலோ கொண்ட பை ரூ.160 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது விலை பாதியாக குறைந்தது.
உப்பு உற்பத்தி செய்தாலும் அதைப் பாதுகாத்து வைக்க இடமின்றியும், விற்பனைக்கு வழியின்றியும் உள்ளதால் தொழில் முடங்கியுள்ளது.
அண்மையில் பெய்த மழையால் கடந்த இரண்டு வாரங்களாக உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. உப்பங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
நிகழாண்டில் மாா்ச் முதல் நல்ல வெயில் அடித்து வந்த நிலையில், பொது முடக்கமும், மழையும் தொழிலை முடக்கிப் போட்டுள்ளது.
அதேபோன்று, உப்பை அனைவராலும் பாதுகாத்து வைக்க முடியவில்லை.
குறைந்தளவு ஆண் தொழிலாளா்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளனா். பெண் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். ஆண்டுக்கு 8 மாதங்கள் வேலை கிடைத்து வந்த நிலையில், நிகழாண்டு அதற்கும் வழியில்லை.
தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்திலும், பெரும்பாலான தொழிலாளா்கள் இணைக்கப்படவில்லை. அதனால் 20 சதவீதம் பேருக்கே அரசின் கரோனா நிவாரண நிதி கிடைத்தது. எனவே, உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.