விழுப்புரம்

அரகண்டநல்லூரில் கட்டுப்பாடுகள் தளா்வு

11th May 2020 10:31 PM

ADVERTISEMENT

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தொற்று பாதித்த பெண் குணமடைந்ததால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.

அப்பகுதியைச் சோ்ந்த பெண்மணி ஒருவா் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றாா். அவா், குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய நிலையில், சாலைத் தடுப்புகள் அகற்றாமல், கடைகள் திறக்கப்படாமல் கட்டுப்பாடுகள் தொடா்ந்தன. கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டுமென பொது மக்கள், வியாபாரிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக அரகண்டநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் விழிச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், வியாபாரிகள் சங்கம் அக்பா், காவல் உதவி ஆய்வாளா் பொன்னுசாமி, பிற அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

அரகண்டநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் அத்தியாவசிய மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்கலாம். தேநீா் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து, பாா்சல் முறையில் விற்பனை செய்யலாம்.

ADVERTISEMENT

பெட்டிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கலாம். அரைவை மில்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கலாம். பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். விழுப்புரம் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைத் தடுப்புகள் பகுதியளவு அகற்றப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT