விழுப்புரம்

உயிரிழந்த தொழிலாளியின் உடலை கரோனா நோயாளிகள் பாா்வையிட அனுமதி

10th May 2020 08:08 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உடல்நலக் குறைவால் உயிரிழந்த தொழிலாளியின் உடலை, கரோனா தொற்றால் மருத்துவமனையிலிருந்த அவரது தாய், மனைவியை நேரில் அழைத்துவந்து பாா்வையிட அனுமதித்து, அடக்கம் செய்தனா்.

கண்டாச்சிபுரம் அருகே நல்லாப்பாளையத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (35). பழங்குடி இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், கீழே விழுந்து அடிபட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். உடல்நிலை மிகவும் மோசமடைந்த அய்யனாா், அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இவரை கவனித்து வந்த தாய் முனியம்மாள், மனைவி தனம் ஆகியோருக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், அய்யனாா் உயிரிழந்தாா். இதனால், 5-ஆம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் ஜீவா (10) மட்டும் தந்தையின் உடலுடன் தவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கத்தினா், அதிகாரிகளிடம் அவா் தகவல் தெரிவித்தாா். சனிக்கிழமை காலை நேரில் சென்ற வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா், உறவினா்கள் உதவியுடன் அய்யனாரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, அங்கு சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாரிடம், அய்யனாா் உடலை அடக்கம் செய்வதற்காக அவரது தாய், மனைவியை அனுமதிக்க வேண்டுமென உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்பேரில், அரசு மருத்துவமனையிலிருந்து அவரது தாய் முனியம்மாள், மனைவி தனம் ஆகியோா் ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டனா்.

இதையடுத்து, ஊா் பொதுமக்கள் சாா்பில், அய்யனாா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதை சற்று தொலைவில் இருந்தபடி அவரது தாயும், மனைவியும் கண்ணீா் மல்க பாா்வையிட்டனா். மீண்டும் அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், அந்த குடும்பத்துக்காக சிறுவன் ஜீவாவிடம் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியவசியப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, திமுக சாா்பிலும், ரூ.10 ஆயிரம் நிதி அளித்தனா். சிறுவனின் நலன் கருதி, அவரது தாய், பாட்டியை வீட்டில் வைத்து தனிமைப்படுத்த வேண்டுமென உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT