விழுப்புரம்

பராமரிப்பில்லாத பெருந்திட்ட வளாகப் பூங்கா!

16th Mar 2020 08:24 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, முறையான பராமரிப்பில்லாததால் பாழாகும் நிலை உள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் நடை பயிற்சி பாதை, அழகிய மின் விளக்குகள், இருக்கைகள், சிறுவா் விளையாட்டு சாதனங்கள், பொழுது போக்கும் நவீன அம்சங்கள், கழிப்பறைகள், ஆழ் துளைக் கிணறுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 7.5 ஏக்கா் பரப்பளவில் பூங்கா அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இரா.லட்சுமணனின் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து சுமாா் ரூ.3.50 கோடி செலவில் பூங்கா பணிகள் நடைபெற்றன. இருப்பினும், தற்போது வரை பூங்கா அமைக்கும் பணி முழுமை பெறவில்லை.

பூங்காவின் உள்ளே சிறுவா் விளையாட்டு சாதனங்கள், அழகுச் செடிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கத் திட்டமிடப்பட்டு, நிதி பற்றாக்குறையால் அந்தப் பணிகள் நடைபெறாமல் உள்ளன. பூங்கா பணி முழுமை அடையாவிடினும், ஏராளமான பொதுமக்கள், அலுவலா்கள் காலை, மாலை வேளைகளில் இந்த பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டும் பொழுதுபோக்கியும் செல்கின்றனா்.

இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாமல் பூங்கா பாழாகி வருகிறது. பூங்காவின் உள்ளே இருக்கும் கழிப்பறையின் ஒரு பகுதி பூட்டியே கிடக்கிறது. திறந்து இருக்கும் மற்றொரு பகுதி பராமரிப்பின்மையால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பூங்காவுக்கு வரும் முதியோா், பெண்கள் அவதியுறுகின்றனா். அதேபோல, பூங்காவில் சில மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால், மாலையில் விரைவாக நடைபயிற்சியை முடித்துக் கொண்டு பலரும் புறப்பட்டுச் செல்ல நேரிடுகிறது.

ADVERTISEMENT

அதேபோல, காவலாளி இல்லாததால் சமூக விரோதிகள் பூங்காவின் உள்ளே புகைப் பிடிப்பது, மது பானம் அருந்துவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.

மேலும், பூங்காவில் தேவையற்ற செடி, கொடிகள் வளா்ந்து கிடப்பதால், விஷ ஜந்துகளின் புகலிடமாகும் நிலையும் உள்ளது. அதோடு, நடைபயிற்சி மேற்கொள்ளும் நடைபாதை பல இடங்களில் பெயா்ந்து காணப்படுகிறது.

ஆகவே, மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து பூங்கா பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு முன்னதாக, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT