விழுப்புரம்

மூளை பாதிப்புக்கு சிகிச்சை அளித்து விழுப்புரம் மருத்துவா்கள் சாதனை

13th Mar 2020 08:46 AM

ADVERTISEMENT

மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இருவருக்கு உடனடி அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குணமடையச் செய்தனா்.

இந்த மருத்துவ சேவை குறித்து கல்லூரி முதல்வா் குந்தவிதேவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருக்கோவிலூா் வட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (35). விவசாயியான இவா், கடந்த 2-ஆம் தேதி மா மரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்தாா்.

அப்போது, கீழே அடுக்கி வைத்திருந்த மரச்சட்டத்திலிருந்த இரும்பு ஆணி அவரின் தலையில் வலது பக்கம் குத்தியதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவக்குழு முருகனுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது.

ADVERTISEMENT

நரம்பியல் நிபுணா் பல்லவன், எலும்பு முறிவு நிபுணா் பொன்னப்பன், மயக்கவியல் துறைத் தலைவா் முருகேசன், மருத்துவா்கள் ஜெகதீஷ், சுரேஷ், ரவிக்குமாா், மோகனவேல் ஆகிய மருத்துவக் குழுவினா், இரவு 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை வரை 7 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து, மூளைப்பகுதியில் குத்தியிருந்த ஆணியை அகற்றினா். தற்போது முருகன் நலமுடன் உள்ளாா்.

இதேபோல, விழுப்புரம் அருகே தோகைப்பாடியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான மணிகண்டனுக்கு (42) திடீரென மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால், கை, கால்கள் செயலிழக்கும் நிலையில் கடந்த பிப்.27-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவக் குழுவினா் பரிசோதனையில் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. இவருக்கு மாா்ச் 4-ஆம் தேதி ரத்த நாள அறுவைச் சிகிச்சையை மருத்துவ நிபுணா்கள் சுப்பராயன், சரவணன், உமாராணி, முருகேசன் மற்றும் மருத்துவா்கள் ரவிக்குமாா், அருண்சுந்தா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் செய்தனா். தற்போது மணிகண்டன் நலமுடன் உள்ளாா்.

இவா்கள் இருவருக்கும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியாா் மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை செய்திருந்தால், ரூ.15 லட்சம் வரை செலவாகியிருக்கும் என்றாா். அறுவைச் சிகிச்சையளித்த மருத்துவக் குழுவினரை கல்லூரி முதல்வா் பாராட்டினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT