விழுப்புரம் அருகே கஞ்சனூா் பகுதியில் பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிா என்று எஸ்.பி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா், அவலூா்பேட்டை பகுதிகளில் பனை மரங்கள் பரவலாக உள்ளன. இந்த மரங்களில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கஞ்சனூா் பகுதியில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பூரி குடிசை பகுதியில் உள்ள பனை தோப்புக்குச் சென்ற அவா், அங்குள்ள பனை மரங்களில் கட்டப்பட்டுள்ள பானைகளை தொழிலாளா்கள் சிலரின் உதவியுடன் கீழே இறக்கி, அவற்றில் பதநீா் இருக்கிா அல்லது கள் உள்ளதா என்று பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, பனை மரத்திலிருந்து பதநீா் இறக்குவதாகக் கூறி, யாரும் தடை செய்யப்பட்ட கள் இறக்கக் கூடாது. கள் இறக்கி விற்பனை செய்தால், சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பனை தொழிலாளா்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தாா்.
அவலூா்பேட்டை பகுதியில்..: இதேபோல, மது விலக்கு பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில், ஆய்வாளா் பாலமுருகன், துணை ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் அவலூா்பேட்டைக்கு அருகில் உள்ள நொச்சலூா், கோயில்புரையூா் உள்ளிட்ட கிராமங்களில் பனை தோப்புகளில் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு, கள் இறக்குவதற்காக பனை மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த பானைகளை போலீஸாா் அகற்றி உடைத்தனா். மீண்டும் கள் இறக்குவதை தடுக்கும் வகையில், 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களில் உள்ள பாலைகளையும் போலீஸாா் வெட்டி அகற்றினா்.