விழுப்புரம்

அரசுப் பேருந்துகளில் தூய்மைப் பணி

13th Mar 2020 08:49 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளித்து வியாழக்கிழமை தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூா், வேலூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரி, நெல்லூா் உள்ளிட்ட பிற மாநிலப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பிற மாநிலப் பகுதிகளிலிருந்து தமிழகத்துக்குள் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு உத்தரவின்பேரில், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் தினந்தோறும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனா்.

விழுப்புரம் கோட்டத்துக்கு உள்பட்ட விழுப்புரம் பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகளில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வியாழக்கிழமை காலை பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா். இந்தப் பணியை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

அப்போது அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வா், போக்குவரத்துத் துறை அமைச்சா் உத்தரவின்பேரில், விழுப்புரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 60 பணிமனைகளில் அனைத்துப் பேருந்துகளிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப் பணி தினந்தோறும் நடைபெற்று வருகிறது. மேலும், தனியாா் பங்களிப்புடன் 70 பேருந்து நிலையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT