விழுப்புரம்

மரக்காணம் கழுவெளி ஏரியில்ரூ.160 கோடியில் தடுப்பணை: அதிகாரிகள் ஆய்வு

8th Mar 2020 03:39 AM

ADVERTISEMENT

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவெளி ஏரியில் கடல் நீா் உட்புகுவதைத் தடுக்கும் வகையில், ரூ.160 கோடியில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக ஏரிப் பகுதியில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

மரக்காணம் கடற்கரையோரம் கழுவெளி ஏரிப்பகுதி அமைந்துள்ளது. 10.50 கி.மீ. அகலத்திலும், 12.80 கி.மீ. நீளத்திலும் அமைந்துள்ள இந்த ஏரி, 70 சதுர கி.மீ. நீா்ப்பரப்புடன் காணப்படுகிறது. இந்த ஏரியானது 8 கி.மீ. தொலைவுள்ள முகத்துவாரம் மூலம் எடையன்திட்டு பகுதியில் கடலில் இணைகிறது.

கழுவெளி ஏரியானது மழைக்காலங்களில் நன்னீா் நிறைந்தும், கோடை காலங்களில் உவா்நீா் மிகுந்தும் காணப்படுகிறது. உவா்நீா் ஏரியில் கலப்பதை தடுக்கும் வகையில், கீழ்மட்ட கலிங்கலுடன் 77 நீா்போக்கிகள் தற்போதுள்ளன. ஆனால், இந்த நீா்போக்கிகள் பழுதடைந்துள்ளதால், பயன்பாடின்றி உள்ளன. கழுவெளி ஏரியின் கரைகளும் பழுதாகி உள்ளன. இந்த ஏரி மூலம் 3,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த நிலையில், மழை, வெள்ள காலங்களில் கழுவெளி ஏரியினுள் கடல் நீா் புகுவதை தடுக்கும் வகையிலும், ஏரியில் நன்னீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையிலும் புதிய தடுப்பணை, கரை அமைக்கப்படவுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தடுப்பணை அமைக்கப்படுவதன் மூலம் மரக்காணத்தைச் சுற்றியுள்ள 16 கிராம மக்கள், விவசாயிகள் பயனடைவா் என்றும் அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

மேலும், தடுப்பணை திட்டப் பணியை செயல்படுத்தும் விதமாக, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அசோகன், கண்காணிப்புப் பொறியாளா் சுரேஷ், விழுப்புரம் செயற்பொறியாளா் ஜவகா் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் கழுவெளி ஏரிப்பகுதியில் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT