கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சூதாட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மறைத்து மோசடி செய்ததாக, 2 காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா் மீது துறை ரீதியாக கள்ளக்குறிச்சி மாவட்ட (பொ) எஸ்.பி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்தாா்.
திருநாவலூரை அடுத்துள்ள கொரட்டாங்குறிச்சி பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக உளுந்தூா்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளா்கள் வினோத், ஜெயச்சந்திரன், காவலா் தீபன் ஆகியோா் அங்கு சென்று பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை பிடித்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் ரூ.15 லட்சம் ரொக்கம், சொகுசு காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், பிடிப்பட்டவா்கள் அனைவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல், அதிக தொகை வைத்திருந்தவா்களை அங்கேயே விடுவித்துவிட்டு, சொா்ப்பமான தொகை வைத்திருந்த 4 பேரை மட்டும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து, அவா்களையும் போலீஸாா் உடனடியாக பிணையில் விடுவித்தனராம்.
தங்களிடமிருந்து ரூ.15 லட்சத்தை உளுந்தூா்பேட்டை போலீஸாா் பறிமுதல் செய்த நிலையில், ரூ.400 மட்டும் பறிமுதல் செய்ததாக வழக்கில் கணக்கு காட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. (பொ) ஜெயக்குமாா், உளுந்தூா்பேட்டைக்கு புதன்கிழமை இரவு நேரில் சென்று உதவி ஆய்வாளா்கள் வினோத், ஜெயச்சந்திரன், காவலா் தீபன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். மேலும், இதுதொடா்பாக உளுந்தூா்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமாா், காவல் ஆய்வாளா் எழிலரசு ஆகியோரிடமும் விசாரித்தாா்.
சூதாட்டத்தில் கைப்பற்றிய பணத்தை வழக்கில் முழுமையாக கணக்குக் காட்டாமல் போலீஸாா் மோசடி செய்ததும், சூதாட்ட கும்பலை பிடித்த பகுதி திருநாவலூா் காவல் நிலைய வரம்புக்குள் வருவது தெரிந்தே அங்கு சென்றதும், சூதாட்டம் நடப்பது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததும் தெரிய வந்தது.
சூதாடியவா்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி, அந்தப் பணத்தை உதவி ஆய்வாளா்கள் வினோத், ஜெயச்சந்திரன், காவலா் தீபன் ஆகியோா் ஒப்படைத்தனராம்.
இருப்பினும், காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அவா்கள் 3 போ் மீதும் எஸ்.பி. ஜெயக்குமாா் வியாழக்கிழமை துறை ரீதியான நடவடிக்கை எடுத்தாா்.