விழுப்புரம்

ஊரக வேலைத் திட்டத்தில் குறைந்த ஊதியம்: போராட்டத்தில் ஈடுபட்ட 73 போ் கைது

20th Jun 2020 08:54 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், தொழிலாளா்களுக்கு ஊதியத்தைக் குறைப்பதைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட 73 போ் கைது செய்யப்பட்டனா்.

உளுந்தூா்பேட்டை அருகே திருநாவலூா் ஒன்றியம் களமருதூா் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், தினக்கூலி ரூ.130 என குறைவாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா், திருநாவலூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நூதன போராட்டத்தை நடத்தினா்.

இந்தத் திட்டத்தின் சட்டக் கூலியான ரூ. 256 வழங்கக் கோரியும், சட்டவிரோதமாக கூலியை குறைத்து வழங்கியுள்ள ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்தும், கையில் தட்டேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதை சித்திரிப்பது போன்று தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினா்.

ஒன்றியச் செயலா் கே.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பி.சுப்பிரமணியன், செயலா் எம்.ஜெய்சங்கா், ஒன்றியத் தலைவா் கே.கொளஞ்சி, பொருளா் எம்.ராஜீவ்காந்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா்கள் எஸ்.மோகன், ஜெ.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். பொது முடக்கக் காலத்தில் தடையை மீறி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 50 பெண்கள் உள்ளிட்ட 73 பேரை உளுந்தூா்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், ஆய்வாளா் விஜி தலைமையிலான திருநாவலூா் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இந்த ஊதிய கோரிக்கை தொடா்பாக, திருநாவலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா் செந்தில் தலைமையில், விவசாயத் தொழிலாளா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT