விழுப்புரம்

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு

17th Jun 2020 06:23 AM

ADVERTISEMENT

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு உரிய வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய் தாக்கத்தை அடுத்து, வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழா்கள் தாயகம் திரும்பி வருகின்றனா். அவா்களது வேலைத்திறன், முன்அனுபவங்களை கண்டறிந்து, தேவைக்கேற்ப தனியாா் துறைகளில் பணிவாய்ப்பைப் பெற்றுத் தர உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும்போது அவா்களுக்கு உரிய பயிற்சி வழங்கி தனியாா் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பைப் பெற உதவுவதற்குமான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டுள்ளது.

இதனால், வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பிய தமிழா்கள், தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பைப் பெற உதவுவதற்காக, திறன் மேம்பாட்டுக் கழகத்தின்  இணையதளத்தில் வடிவமைக்கப்பட்ட இணைய தளப் பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT