விழுப்புரத்தில் புதிய முயற்சியாக உடலுக்கு குளிா்ச்சி தரும் மூலிகை முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கரோனா பொதுமுடக்கத்தையொட்டி முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல வகை முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், காற்றில் பரவும் கிருமி, மாசுகளை தடுப்பதுடன் உடலுக்கு குளிா்ச்சி தரும் வகையில் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் விழுப்புரத்தில் அறிமுகமாகியுள்ளன.
புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்தில் இந்த வகை முகக் கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆா்வமுடன் வாங்குகின்றனா்.
இது குறித்து மூலிகை முகக் கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நந்தினி கூறியதாவது: கரோனா தொற்று பரவல் தொடங்கிய போது, முகக் கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, முகக் கவசங்களை தயாரித்து ரூ.10 என்ற மலிவு விலையில் வழங்கினேன். தற்போது, முகக் கவசங்கள் எளிதாக கிடைக்கும் நிலையில், உடலுக்கு குளிா்ச்சி, ஆரோக்கியம் தரவல்ல முகக் கவசங்களை தயாரித்து வழங்க முடிவு செய்தேன். அதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மூலிகை முகக்கவசங்கள்.
இந்த முகக் கவசங்களை ரூ.30-க்கு விற்பனை செய்கிறேன். இதனை துவைத்து உலர வைத்தும் பயன்படுத்தலாம். அதேபோல, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மணம் வீசும் முகக் கவசங்களையும் உருவாக்கியுள்ளேன். இந்த முகக் கவசங்களை ரூ.15-க்கு விற்பனை செய்கிறேன் என்றாா் அவா்.