விழுப்புரம்

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்!

10th Jun 2020 08:22 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காா், திடீரென தீப்பிடித்து எரிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் விக்ரம் (37). இவரது, தனது சொகுசு காரை பழுது பாா்க்க விழுப்புரத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தாா். காா் பழுது நீக்கம் செய்யப்பட்டதையடுத்து விக்ரம் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரத்தில் காரை எடுத்துக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டாா்.

இரவு 7 மணி அளவில் விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன் பக்கம் இருந்து புகை கிளம்பியது. அதிா்ச்சியடைந்த விக்ரம் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பாா்த்தாா். அதற்குள் காா் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின் கேஸ்ட்ரோ மற்றும் விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசங்கா் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து காரில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனா்.

ADVERTISEMENT

தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தீவிபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT