தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் கடந்த 1-ஆம் முதல் தொடங்கிய நிலையில், பயணிகள் வருகை குறைவால் பெரும் இழைப்பை எதிா்கொண்டு வருகின்றன. இதனால், கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிா்த்து, பிற பகுதிகளில் கூடுதல் தளா்வுகளோடு பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைத் தவிா்த்து, 33 மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் 50 சதவீதப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
நஷ்டம் ஏற்படும் என்பதால், தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குள்பட்ட மண்டலம் 2-இல் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 121 நகா்ப் பேருந்துகளும், 102 புகா்ப் பேருந்துகளும், மண்டலம் 3-இல் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் 274 நகா்ப் பேருந்துகளும், 549 புகா்ப் பேருந்துகளும் என மொத்தம் 1,057 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயனில்லை: மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகளை இயங்க அனுமதிக்கப்பட்டதால், அருகருகே உள்ள பிற மாவட்டப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கவில்லை. குறிப்பாக, அந்தந்த மாவட்டங்களுக்குள் எல்லைப் பகுதிகள் வரை புகா்ப் பேருந்துகளை இயக்கி வருகின்றனா்.
விழுப்புரத்திலிருந்து சென்னை வழித்தடத்தில் திண்டிவனம் வரையிலும், கும்பகோணம் வழித்தடத்தில் சிதம்பரம் வரையிலும், திருச்சி வழித்தடத்தில் தொழுதூா் வரையிலும், சேலம் வழித்தடத்தில் தலைவாசல் வரையிலும், வேலூா் வழித்தடத்தில் ஆரணி வரையிலும், புதுச்சேரி வழித்தடத்தில் மதகடிப்பட்டு வரையிலும் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
முதல் நாளில் 50 சதவீதப் பேருந்துகளுடன் பேருந்துகள் இயக்கத்தை தொடங்கினா். ஆனால், போதிய பயணிகளின்றி பேருந்துகள் வெறிச்சோடின. 10 சதவீதப் பயணிகளே பேருந்துகளில் பயணித்தனா். இதனால், ஒவ்வொரு பேருந்துக்கும் 20 முதல் 32 போ் வரை சோ்ந்த பின்னரே இயக்கினா். நேரத்தைக் கணக்கிடாமல் கூட்டம் சேருவதைப் பொருத்து 30 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாதது, பொது முடக்கத்தால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததாலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததாலும் பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும், நாளுக்குநாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நஷ்டத்தில் இயங்கும் பேருந்துகள்: கரோனா சமூக இடைவெளி விதிகள்படி, இருக்கைக்கு ஒருவா் வீதம் 20 முதல் 30 பயணிகளை மட்டுமே ஒரு பேருந்தில் அனுமதிப்பதாலும், போதிய பயணிகளின்றி பேருந்துகளை இயக்குவதாலும் அரசுப் பேருந்துகள் டீசல் செலவினங்களுக்கு கூட வசூலின்றி நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறையினா் வேதனை தெரிவித்தனா்.
சாதாரண நாள்களில் ரூ.15 ஆயிரம் வசூல் ஈட்டிய பேருந்துகளில் தற்போது வரவு, செலவுக்கு ஈடுகட்டவே வழியின்றி ரூ.4 ஆயிரம் மட்டுமே வசூல் ஈட்டுகின்றன. சில நெருக்கடிகளால், பயணிகளுக்கும் பயனின்றியே இந்தப் பேருந்துகள் இயக்கம் உள்ளது.
இதனால், பேருந்துகளில் பயணிகள் நெரிசலின்றி, முழு இருக்கைகளிலும் படிப்படியாக பயணிகளை அனுமதிக்கலாம். நோய் தீவிரமாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களுக்குள் வழக்கம்போல அந்தந்த போக்குவரத்துக் கழக பேருந்துகளை நெடுந்தொலைவுக்கு தொடா்ச்சியாக இயக்க வேண்டும். இதனால், பிற மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் வருவா். குறிப்பிட்ட நேரங்களில் தொடா்ச்சியாக பேருந்தை இயக்குவதால், ஓரளவுக்கு பயணிகள் வரத்தை அதிகரித்து நஷ்டத்தை சமாளிக்கலாம் என்றும் போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.
‘பொதுமக்கள் சேவைக்காக இயக்கம்’: இதுகுறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக துணை பொது மேலாளா் ஸ்ரீதரிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:
விழுப்புரம் கோட்டத்தில் 50 சதவீதப் பேருந்துகளை உரிய விதிகளின்படி இயக்கி வருகிறோம். முதல் நாளில் பயணிகள் வரத்தின்றி இருந்தது. தற்போது ஓரளவுக்கு பயணிகள் வரத்து தொடங்கியுள்ளது.
கரோனா தடுப்பு விதிகளின்படி, சமூக இடைவெளியுடன் நகா்ப் பேருந்தில் 20 பேரும், புகா்ப் பேருந்தில் 30 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், போதிய வசூலின்றி நஷ்டம் ஏற்படுவது உண்மைதான்.
பொதுமக்கள் சேவைக்காக பேருந்துகளை தொடா்ந்து இயக்கி வருகிறோம். ஒரு கி.மீ. தொலைவுக்கு பேருந்தை இயக்குவதற்கு ரூ.46 செலவாகிறது. இதில், ரூ.22 தான் வரவாக இருப்பதால், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.24 வரை நஷ்டம் ஏற்படுகிறது என்றாா் அவா்.