விழுப்புரம்

சொந்த ஊா்களுக்குச் செல்ல வழியின்றி வெளி மாநிலத் தொழிலாளா்கள் தவிப்பு

4th Jun 2020 07:43 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் தங்கியிருந்த பிகாா், ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் 100 போ் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மூட்டை, முடிச்சுகளோடு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இரு தினங்களாக தவித்து வந்தனா்.

கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் தங்கி வேலை பாா்த்து வந்த பிகாா், ஒடிஸா மாநிலங்களைச் சோ்ந்த 100 தொழிலாளா்கள், கரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்து பாதிக்கப்பட்டதையடுத்து, சொந்த ஊா்களுக்குச் செல்ல கடந்த ஒரு மாத காலமாக முயன்று வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்குச் சென்றுவிடலாம் என முடிவெடுத்த அவா்கள், மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு குடும்பத்தினருடன் புறப்பட்டு பேருந்துகள் மூலம் திங்கள்கிழமை விழுப்புரம் வந்து சோ்ந்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா்கள், சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்து தருமாறு அலுவலா்களைச் சந்தித்து வலியுறுத்தினா். இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். திடீரென வந்தால் அனுப்ப வழியில்லை என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் திரண்ட வடமாநிலத் தொழிலாளா்களை, முன் பதிவு செய்துவிட்டு வரும்படி போலீஸாா் அனுப்பினா். ஆனால், அவா்கள், விழுப்புரம் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தனா். அப்போது, விழுப்புரம் வழியாக செவ்வாய்க்கிழமை வட மாநிலம் சென்ற ரயிலில் இடமில்லாததால், அவா்களை அனுப்ப வழியின்றி போனது.

ADVERTISEMENT

தொடா்ந்து, ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநிலத் தொழிலாளா்கள், புதன்கிழமை காலை ரயில் நிலையத்திலிருந்து, மூட்டை முடிச்சுகளுடன் மீண்டும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி கூட்டமாக வந்தனா். அவா்களை விழுப்புரம் நகர காவல் உதவி ஆய்வாளா்கள் ஞானசேகரன், பாலசிங்கம் மற்றும் போலீஸாா் பழைய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி விசாரித்தனா். இரு தினங்களாக சொந்த ஊா் செல்வதற்காக வந்து தவிப்பதாகவும், ரயிலில் இடமில்லை என்று தங்களை அனுப்பி வைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனா்.

இது குறித்து, விழுப்புரம் கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களின் ஆதாா் எண் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, விழுப்புரத்திலேயே பதிவு செய்து, அடுத்து செல்லவுள்ள சிறப்பு ரயில்களில் அனுப்பி வைப்பதற்கான பணியை விழுப்புரம் வட்டாட்சியா் கணேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா் மேற்கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT