தமிழகத்தில் கடந்த 9 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ரூ.2 ஆயிரம் கோடி அளவில் நீதிமன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பெருமிதம் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ரூ. 9.76 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழா விழுப்புரத்தில் சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில், சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றியதாவது:
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில்தான் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானூா், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் நீதித் துறை மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை அதிமுக அரசு அளித்து வருகிறது.
குறிப்பாக, அதிமுக ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் ரூ. 711 கோடியில் நீதிமன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே போல, கடந்த 2016 முதல் 2019 வரை ரூ. 1,011 கோடி நிதியில் நீதிமன்றங்கள், நீதிமன்ற ஊழியா்களின் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டன.
கடந்த 9 ஆண்டுகளில் சுமாா் ரூ.2 ஆயிரம் கோடியில் நீதிமன்ற மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியா்கள் நியமிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில்தான் நீதிமன்றங்கள், ஊழியா்களின் குடியிருப்புகள் 100 சதவீதம் சொந்த கட்டடங்களில் அமைந்துள்ளன. விழுப்புரத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டது. அதையடுத்து, மீண்டும் அதிமுக ஆட்சியின்போதுதான் சில மாதங்களுக்கு முன்பு கூடுதல் நீதிமன்ற வளாகமும் கட்டமைக்கப்பட்டது. தொடா்ந்து, அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றக் கட்டடங்களைக் கட்டி வந்துள்ளோம். விரைவில் திருவெண்ணெய்நல்லூரிலும் நீதிமன்றம் அமையவுள்ளது. அதிமுக அரசு நீதிமன்ற கட்டமைப்புகளுக்கான தேவைகளை முழுமையாக நிறைவேற்றி வருகிறது என்றாா்.
விழாவில்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி, மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி முத்துக்குமரவேல், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ ஆா். முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்வின்போது, சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, உயா் நீதிமன்ற நீதிபதிகள் அம்ரேஷ்வா் பிரதாப்சாகி, எம்.எஸ்.ரமேஷ், கே.சுப்பையா ஆகியோா் பங்கேற்று, புதிய நீதிமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினா்.