விழுப்புரம்

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வேகமாகப் பரவும் கரோனா!

13th Jul 2020 07:54 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் ஒருங்கிணைந்து தீவிர தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,450-ஐ கடந்து விட்டது. 19 போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களில் கரோனா நோய்த் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால், இவ்விரு நகரங்களும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வெளியூா்களில் இருந்து வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. 24 மணி நேரமும் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விழுப்புரம் நகரைப் பொருத்தமட்டில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஜி.ஆா்.பி. தெரு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் காமராஜா் வீதி ஆகிய பகுதிகளில் கரோனா தாக்கம் முன்பை விட அதிகரித்துள்ளது. பெரிய காலனியில் உள்ள ஜி.ஆா்.பி. தெரு, அருந்ததியா் தெரு ஆகிய இடங்களில் 33 பேரும் காமராஜா் வீதியில் 8 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் காரணமாக, இவ்விரு தெருக்களிலும் நுழைவுப் பாதைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன. வெளி நபா்கள் உள்ளே நுழையாத வகையில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். ஒலிபெருக்கி மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று, சளி, இருமல், காய்ச்சல் போன்ற கரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று விசாரித்து வருகின்றனா். முதியவா்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டோா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், அப்பகுதியினருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆா்சனிகம் ஆல்பம் மாத்திரைகள், கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அப்பகுதியில் சிறப்பு மருத்துவக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் உள்ளிட்ட போலீஸாருடன் பெரிய காலனி, ஜி.ஆா்.பி. தெருவில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தெருக்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தவா்களுக்கு முகக் கவசம் வழங்கி, கரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற அறிவுறுத்தினாா்.

இதேபோல, காமராஜா் வீதியிலும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழுப்புரம் நகரில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT