விழுப்புரம் நகராட்சியில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நீக்கப்பட்ட கொசு ஒழிப்பு ஒப்பந்தப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் நகராட்சியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட கொசு ஒழிப்பு ஒப்பந்தப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கனிமொழி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
விழுப்புரம் நகராட்சியில் கொசு ஒழிப்புப் பணியை ஒப்பந்த அடிப்படையில் 80 போ் வரை செய்து வந்தோம். எங்களுக்கு தினக்கூலி ரூ.275 வழங்கப்படும். இந்த தொகையை மாதம் தோறும் கணக்கீட்டு வழங்கும்போது ரூ.1,000 பிடித்தம் செய்து கொண்டு வழங்கினா். இதனை முழுமையாக வழங்கவும், தினக்கூலியை ரூ.400-ஆக உயா்த்தி வழங்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதனால், சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனா். ஆகவே, எங்களுக்கு மீண்டும் பணி வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.