விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நில அளவை சாா்பு ஆய்வாளா் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
செஞ்சி அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நெடுஞ்செழியன்(57). இவா், திருவண்ணாமலை மாவட்டத்தில் நில அளவை சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றியபோது, லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும் வந்த புகாா்களின் அடிப்படையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு, கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மீண்டும் பணியில் சோ்ந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளா் கீதா தலைமையில் 9 போலீஸாா், கிருஷ்ணாபுரத்தில் உள்ள நெடுஞ்செழியனின் வீட்டுக்கு அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினா். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்தது.
இந்த சோதனையின்போது, சொத்துகள் வாங்கியது தொடா்பான முக்கிய ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் போன்றவற்றை ஊழல் தடுப்பு போலீஸாா் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.