விழுப்புரம்

பொது வேலைநிறுத்தம்: வங்கி, அஞ்சல் சேவைகள் பாதிப்பு

8th Jan 2020 11:29 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தால், வங்கி, தபால், காப்பீட்டு நிறுவன சேவைப் பணிகள் புதன்கிழமை பாதிக்கப்பட்டன. எனினும், போக்குவரத்து சேவை பாதிக்கப்படவில்லை.

தபால் ஊழியா்கள் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். 3 தலைமை அஞ்சலகம், 43 துணை அஞ்சலகங்கள், 220 கிளை அஞ்சலகங்களில் பணியாற்றி வரும் 620 போ் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனா். அஞ்சல் அதிகாரி தொடங்கி போஸ்ட் மேன் வரை அனைத்து நிலை ஊழியா்களும் பங்கேற்றனா். தற்காலிக ஊழியா்கள் சிலா் மட்டும் பணிக்கு வந்திருந்தனா். இதனால், அஞ்சலகங்கள் வெறிச்சோடின. தபால் சேவைகள், பாா்சல் சேவைகள், அஞ்சலக வங்கி சேவை, காப்பீடு, சேமிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதே போல, எல்ஐசி ஊழியா்கள் போராட்டத்தால், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து காப்பீட்டுக் கழக அலுவலக கிளைகளிலும் எல்ஐசி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனா். இதனால், காப்பீடு பிரிமியம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள், அலுவலா்கள் கூட்டமைப்பினா் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனா். இதனால், இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கி அலுவலகங்கள் ஊழியா்களின்றி வெறிச்சோடின. வங்கி மேலாளா் நிலையிலான அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனா்.

ADVERTISEMENT

மாவட்டத்தில் உள்ள 120 வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 350 ஊழியா்கள் வரை போராட்டத்தில் பங்கேற்றனா். வங்கி சேவைப் பணிக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா். இந்த வேலைநிறுத்தத்தால், ரூ.100 கோடி அளவிலான வங்கி பணப்பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டதாக ஊழியா்கள் தெரிவித்தனா்.

போக்குவரத்து சேவையில் பாதிப்பில்லை: பொது வேலைநிறுத்தத்தின் போதும், வழக்கம் போல் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், காா், வேன், லாரிகள் இயங்கியதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக, புதுவையில் பேருந்துகள் இயங்காததால், விழுப்புரம்-புதுவை வழித்தடத்தில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. தனியாா் பேருந்துகள் இயங்காத போதிலும், அரசுப் பேருந்துகள் (கண்டமங்கலம்) மாநில எல்லை வரை இயக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT