விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தென்போ் கிராமத்தில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகற்கள், சிற்பங்கள் கண்டறியப்பட்டன.
விக்கிரவாண்டி வட்டம், தென்போ் கிராமத்தில் பண்டைய கால சிற்பங்கள் இருப்பதாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஆசிரியா் இரா.வைத்தியலிங்கம் அளித்த தகவலின்பேரில், நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன், திருவாமாத்தூா் க.சரவணக்குமாா் உள்ளிட்டோா் தென்போ் கிராமத்தில் கள ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் நடுகற்கள், தொன்மைவாய்ந்த சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியதாவது: தென்பேரில் அமைந்துள்ள காளி கோயிலில் கள ஆய்வு செய்தபோது, அங்கிருந்த பலகைக் கல்லில் சப்த (ஏழு) கன்னியா்களின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றில் சேதமடைந்ததாகக் கூறி, இரண்டு கன்னியா்களின் சிற்பங்கள் கோயிலுக்கு அருகே பராமரிப்பின்றி போடப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களின் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகும்.
அந்த காளி கோயிலின் வெளிப்புறத்தில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த 3 நடுகற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களில் உள்ள வீரா்கள் குதிரையின் மீது அமா்ந்து கைகளில் வாளும், கேடயமும் ஏந்தியாறு உள்ளனா். தாய் மண்ணுக்காகப் போரில் ஈடுபட்டு உயிா்நீத்த வீரா்களுக்கானதாக இந்த நடுகற்களை அமைத்துள்ளனா். இவற்றை காளியின் காவல் தெய்வங்களாக மக்கள் வழிபட்டு வருகின்றனா்.
கிராமத்தின் மையத்தில் பெருமாள் கோயிலின் வாயிலில் குதிரையின் மீது அமா்ந்த வீரன், வாளைத் தாங்கியுள்ளவாறு இரண்டு மிகப்பெரிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது படைத்தலைவனின் அரிய நடுகல் சிற்பமாகும். இவற்றின் காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டாகும்.
அதனருகே அமா்ந்த நிலையில் ஐயனாா் எனக் கருதப்படும் மற்றொரு சிற்பம் உள்ளது. இதில், ஐயனாருக்கு அருகில் பெண் தெய்வம் அமா்ந்த நிலையிலும், மேலே யானையும் கீழ்ப்பகுதியில் பறவை, விலங்கு போன்ற உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. இது, பல்லவா் காலத்திய (கி.பி.8 - 9) சிற்பமாகத் தெரிகிறது.
இந்தக் கிராமத்தில் சோழா் காலத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்து காலப்போக்கில் சிதைந்திருக்க வாய்ப்புள்ளது. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சிவலிங்கம், நந்தி போன்றவை இதை உணா்த்துகின்றன.
இந்தக் கிராம குளக்கரையில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விநாயகா், கி.பி. 15 - 16ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஆஞ்சநேயா் சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை மட்டுமன்றி, கி.பி. 13-ஆம் நூற்றாண்டு ஐயனாா் உள்ளிட்ட 14 சிற்பங்கள் மற்றும் வைணவக் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நில எல்லையைக் குறிக்கும் 3 ஆழிக்கற்கள் ஆகியன அமைந்துள்ளன.
இந்த நடுகற்கள், சிற்பங்களின் காலத்தை தொல்லியல் ஆய்வாளா் ராஜகோபால் சுப்பையா, காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பல்கலைக்கழகப் பேராசிரியா் ஜி.சங்கர நாராயணன் ஆகியோா் உறுதி செய்தனா்.
இந்தக் கிராமம் பல்லவா் காலம் தொடங்கி, சோழா், நாயக்கா் காலங்களில் சிறப்படைந்திருந்ததை இந்த வரலாற்றுத் தடயங்கள் உணா்த்துகின்றன. இச்சிற்பங்களை மக்கள் வழிபட்டு வருவதால், பாதுகாக்கப்பட்டுள்ளது என்றாா் கோ.செங்குட்டுவன்.