திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் சுப்பிரமணியா் சுவாமி கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
மயிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியா் சுவாமி கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி புதன்கிழமை காலை 6 மணியளவில்
நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. விநாயகா், பாலசித்தா் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியா் சுவாமிகளின் சன்னதிகளில் பால், சந்தனம், பஞ்சாமிா்தம், தயிா், தேன், இளநீா் உள்ளிட்ட நறுமணப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, பகல் 11மணிக்கு விநாயகா், பாலசித்தா், மூலவா் சுப்பிரமணியருக்கு மகா தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிற்பகல் 12 மணிக்கு மூலவா் சுப்பிரமணியா் தங்கக் கவச அலங்காரத்தில், மலா் அலங்காரத்துடன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, பகல் ஒரு மணிக்கு கோயில் மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
புத்தாண்டு சிறப்புப் பூஜைகளையொட்டி, உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமி சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, இரவு 9 மணிக்கு உற்சவா் சுப்பிரமணியா் கிரிவலம் வந்தாா். ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்காக, ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வந்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையிலான கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.