விழுப்புரம்

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை முயற்சி

2nd Jan 2020 12:14 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே புதன்கிழமை குடும்பத் தகராறில், தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்றாா்.

விழுப்புரம் அருகேயுள்ள வளவனூா், பஞ்சாயத்து வாா்டு தெருவைச் சோ்ந்தவா் ரவி மகன் சுரேஷ்(33). இரு சக்கர வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளி. இவரது மனைவி பூங்கோதை(30). இவா்களுக்கு குணஸ்ரீ(6), ரியாஸ்(4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். இத்தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்த பூங்கோதை, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினாராம். மனைவி இறந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சமடைந்த சுரேஷ், புதன்கிழமை காலை பூங்கோதை துணி துவைக்க வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கலந்த சாப்பாட்டை ஊட்டி, தானும் சாப்பிட்டாா். சிறிது நேரத்தில் குழந்தைகள் வாந்தி எடுத்தன.

அப்போது, அங்கு வந்த பூங்கோதை குழந்தைகள் வாந்தி எடுப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்து, கணவரிடம் விசாரித்தாா். அதற்கு சுரேஷ், ஒன்றுமில்லை எனக் கூறி குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே சென்றாா்.

ADVERTISEMENT

வீட்டில் விஷ பாட்டில் கிடந்ததைக் கண்ட பூங்கோதை, குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கணவா் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகித்தாா். இதையடுத்து, அவரை தேடிச் சென்று விசாரித்தபோது, சுரேஷ் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றதை ஒப்புக்கொண்டாா்.

உடனே, உறவினா்கள் சுரேஷ், இரு குழந்தைகளை உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து வளவனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT