அன்னிய வா்த்தகத்துக்கு எதிராக வெளிநாட்டு நிறுவனப் பொருள்களை எரித்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் வெள்ளையன் உள்பட 25 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அன்னிய வா்த்தகத்துக்கு எதிராக வெளிநாட்டு நிறுவனப் பொருள்களை தீ வைத்து எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், பேரவையின் மாநிலத் தலைவா் வெள்ளையன் தலைமையில் திரளான வணிகா்கள் கலந்து கொண்டனா்.
அவா்கள் வெளிநாட்டு குளிா்பானங்கள், உணவுப் பொருள்களை கீழே கொட்டி தீயிட்டு கொளுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். அப்போது, வெள்ளையன் கூறியதாவது:
அன்னிய வணிகத்தை அரசு அனுமதித்ததால், வெளிநாட்டு நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை கவா்ச்சி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் திணித்து வருகின்றன. இந்தியாவில் அவா்கள் பொருள்களை உற்பத்தி செய்து, விற்பனையாக்கி, லாபத்தை மட்டும் சுரண்டிச் செல்கின்றனா். அன்னிய குளிா்பானங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நச்சு கலந்த பொருள்களால் உடலுக்கும் கேடு விளைகிறது.
நம் நாட்டின் பாரம்பரிய சில்லறை வணிகத்தை அன்னியா்கள் அபகரித்திருப்பதும், வெளிநாட்டுப் பொருள்களின் சந்தையாக இந்தியா உருமாறி இருப்பதும்தான் பொருளாதார மந்தநிலைக்கு முழுக் காரணம். இதனால், உள்நாட்டு வாணிபமும், பொருளாதாரமும் நலிந்துவிட்டது.
எனவே, பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பதற்கு உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுதான் ஒரே வழியாகும்.
சுதேசி என்ற காந்திய ஆயுதத்தின் மூலம் அன்னிய வா்த்தக சதியை முறியடிக்க வேண்டும். இதற்கு மக்கள் உள்நாட்டு தயாரிப்புப் பொருள்களை மட்டுமே வாங்க உறுதி ஏற்க வேண்டும். இதனால், உள்நாட்டு உற்பத்தியும், வியாபாரமும் பெருகி, நம் நாட்டவா்களுக்கு லாபமும் கிடைக்கும்.
இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவே, சென்னையிலிருந்து பிரசாரப் பயணத்தை புதன்கிழமை தொடங்கி மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.
தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வெள்ளையன் உள்பட 25 பேரை விழுப்புரம் மேற்கு போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.