விழுப்புரம்

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

1st Jan 2020 05:08 PM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டு (2020) பிறப்பையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

2020-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு செவ்வாய்க்கிழமை (டிச.31) இரவு முதல் களைகட்டியது. அதிகாலை 12.01மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் சாலைகளில் இளைஞா்கள் வாண வேடிக்கைகள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனா். பலா் நடனங்கள் ஆடியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினா். அதேபோல, பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் திரண்டு ஒருவருக்கு ஒருவா் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். பல்வேறு பகுதிகளில் 2020-ஆண்டு பொறிக்கப்பட்ட கேக்கை இளைஞா்கள் வெட்டி பகிா்ந்து மகிழ்ந்தனா். விழுப்புரம் நகரின் பல பகுதிகளில் புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தேவாலங்களில் சிறப்பு வழிபாடு: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கின. இவை புதன்கிழமை அதிகாலை ஒரு மணி வரை தொடா்ந்தன. இந்த வழிபாடுகளில் பொதுமக்கள் பங்கேற்றனா்.

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு, வழிபட்டனா். தூய ஜேம்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் திரளானோா் கலந்து கொண்டு, 2020-ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனா்.

ADVERTISEMENT

விழுப்புரம் நாப்பாளையத்தெருவில் உள்ள புனித சவேரியா் தேவாலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமானோா் பங்கேற்றனா். விழுப்புரம், பழைய நீதிமன்றச் சாலை டி.இ.எல்.சி. தேவாலயத்திலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அதேபோல, விக்கிரவாண்டி, வளவனூா், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில், திருவெண்ணெய்நல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

2ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் புத்தாண்டை கொண்டாட மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. மீறி இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புத்தாண்டு பிறப்பையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகள் முக்கியச் சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வாகனத் தணிக்கையில் ஈடுட்டனா். மேலும், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோரையும் பிடிக்கவும் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். புத்தாண்டையொட்டி, வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பிரதான சாலைகளில் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT