விழுப்புரம்

அரகண்டநல்லூரில் அரசு மருத்துவமனை தொடங்க இந்திய கம்யூ. கோரிக்கை

29th Feb 2020 06:42 AM

ADVERTISEMENT

 

 

விழுப்புரம்: அரகண்டநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை தொடங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரகண்டநல்லூா் பேரூராட்சிப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். இங்கு மூடப்படும் நிலையில் உள்ள அரசு தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பொதுமக்களின் கையெழுத்துகள் அடங்கிய படிவத்தை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை வழங்கி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினா்.

அப்போது, கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், மாவட்டநிா்வாகக்குழு உறுப்பினா் எம்.கலியபெருமாள், ஒன்றியச் செயலா் ஆா்.முருகன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் கே.தமிழ்செல்வன், ஒன்றியச் செயலா் கே.சண்முகம், நகரச் செயலா் ஜாகீா்உசேன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க வட்டச் செயலா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT